Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்கா அதிபர் யார் ? முடிவுகளில் இழுபறி …!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பார்வை அமெரிக்கா மீது விழுந்துள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானது தான் இந்த காலதாமதத்திற்கு மிகமிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பென்சில்வேனியா,  நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா, அலாஸ்கா என இந்த ஐந்து  மாநிலங்களிலும் முடிவுகள்  வெளியாக வேண்டியிருக்கின்றன. பென்சில்வேனியா முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு மட்டும் 20தேர்தல் சபை வாக்குகள் அங்கு இருக்கின்றன. பென்சில்வேனியா, நார்த் கரோலினா மற்றும் ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் யார் வெற்றி பெருகின்றார்களோ அவர்களே இப்போது வெற்றியாளராக முடியும் என்ற ஒரு சூழல் இருக்கிறது.

ட்ரம்ப் குற்றசாட்டு:

ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுமா ? என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் நேற்று முதல் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வாக்குப் பதிவு,  தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறை ஆகியவற்றில் தன்னுடைய அதிருப்தியையும், சந்தேகத்தையும் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றார். மேலும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றார்.

ட்விட்டர் ஆட்சேபம்:

எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் டிரம்ப் வைத்து வரும் குற்றசாட்டு சர்சை குறித்து அமெரிக்க ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. ஏனென்றால் எந்த ஆதாரமும் இல்லாமல், உலக வல்லரசான ஒரு நாட்டினுடைய தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்றும், எதிர் அணியை சேர்ந்தவர்கள் மோசடி செய்கிறார்கள் என்று தொடர்ந்து ட்விட் செய்து வந்தார். ஆதாரம் ஏதும் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட பதிவுகளை ட்விட்டர் நீக்கியது.

ஜோ பைடன்:

தற்போதைய சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ஜோ பைடன் 264 தேர்தலில் வாக்குகளை பெற்று இருக்கின்றார். 270 வாக்குகளை பெற்றவர் அதிபராக அறிவிக்கப்படுவார்கள். இந்த சூழலில் பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, அலாஸ்கா  நெவாடா ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வர வேண்டியிருக்கிறது. இவற்றில் மொத்தம் 60 தேர்தலில் வாக்குகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் டிரம்ப் பெற்றால் மட்டுமே அவரால் அதிபராக முடியும். ஆனால் ஜோ பைடன் நெவாடா மாநிலத்தில் இருக்கக்கூடிய 6 வாக்குகளை பெற்றால் அதிபராகி விடலாம்.

வழக்கு:

இந்த நிலையில் தான் விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, அரிஸோனா ஆகிய மாநிலத்தில் நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருக்கின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையை பார்வையிட தங்களுடைய ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். தங்களுடைய கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் தான் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  டிரம்ப் குழுவினர் வழக்குகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

தேர்தல் முடிவு:

இதன் காரணமாக விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா, அரிஸோனா மாநில தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளபடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அமெரிக்காவினுடைய வரலாற்றின்படி தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தேர்தல் முடிவுகளை உடனடியாக அமலுக்கு வரும். ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் போது ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம். அல்லது தேர்தல் குழுவை அவர் நாடலாம். அவர்களுடைய முடிவின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜனவரி 20ஆம் தேதி புதிய அதிபர்:

நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பிறகு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மாதம் கால அவகாசம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஜனவரி மாதம் 20ஆம் தேதி தான் புதிய அதிபர் பதவி ஏற்பார். தற்போதைய சூழலில் தேர்தல் முடிவுகள் வெளியாகியும் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் கூட அது நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Categories

Tech |