உள்துறை அமைச்சர் அமித் ஷா ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் பேசினார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, “நமது அரசியலமைப்புச் சட்டம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையை வழங்கியுள்ளது. மேலும், பொதுப்பட்டியலில் மொழி உள்ளதால், அது குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, ’ஒரே நாடு ஒரே மொழி ’ திட்டத்தை அமல்படுத்துவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை. மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி ஒதுக்கப்படுவதில்லை” என்றார்.