நாங்கள் அரசியல் செய்யவில்லை உலக சுகாதார அமைப்பு தான் சீனாவுடன் சேர்ந்து அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதானோம் கூறும்பொழுது,
“கொரோனா வைரஸ் விவகாரத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். இதுவே உலக அளவில் வேறுபாடுகளை உங்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் மயமாக்குவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இப்போதுள்ள சூழலில் வெற்றி பெற நாட்டின் ஒற்றுமை மிகவும் அவசியமானதாகும். எங்களால் முடிந்தவரை உயிர்களை காப்பாற்ற இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றுகிறோம். நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” எனக் கூறினார்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் அளித்துள்ள பதில் குறித்து ஜனாதிபதி நிருபர்களுக்கு பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது
கொரோனா பிரச்சனையை நாங்கள் அரசியல் மயமாக்கவில்லை. உலக சுகாதார அமைப்பின் தலைவர்களே அரசியல் செய்கிறார்கள். கடந்த ஆண்டு 45 கோடி டாலரை உலக சுகாதார அமைப்பிற்காக நாங்கள் செலவு செய்தோம். அதற்கு முன்பு லட்சக் கணக்கான டாலர்களை அவர்களுக்காக செலவு செய்தோம். அவர்களும் அதனை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் சீனாவுடன் உறவு வைத்துக்கொண்டு அரசியல் பற்றி பேசுகின்றார்கள்.
4.20 கோடி டாலர் தான் சீனா சுகாதார அமைப்பிற்கு செலவிட்டது. உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளும் சீனாவுக்கு ஆதரவாகவே இருக்கிறது. இது சரியானதல்ல, நியாயமானதாகவும் எங்களுக்கு தெரியவில்லை. உலகத்துக்கும் இது நியாயமற்றது. உலக சுகாதார அமைப்பு தங்களுக்குரிய உரிமைகளை பயன்படுத்தினாலும் அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துவது அவசியம். ஆனால் அவர்கள் அது போன்று நடத்தியதாக தெரியவில்லை. நாங்கள் செய்து கொண்டிருப்பதில் சில முடிவுகளை எடுக்க உள்ளோம். மற்ற நாடுகள் குறைவான நிதி செலவிடுவதும், அமெரிக்கா மட்டும் அதிகமான நிதி செலவிடுவதும் சரியானதல்ல” இவ்வாறு கூறியுள்ளார்.