Categories
பல்சுவை

டிசம்பர் மாதத்தில் அதீத உயர்வை கண்ட மொத்த விலை பணவீக்கம்!

மொத்த விலை பணவீக்கமானது எட்டு மாதங்களில் இல்லாத அளவு உயர்வைச் சந்தித்துள்ளது. அரசு வெளியிட்ட கணக்கீட்டின் படி 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்தாண்டு, ஏப்ரல் மாதத்தில் 3.1 விழுக்காடாக அதிகரித்து இருந்தது.இதன் அளவு 2018ஆம் ஆண்டு டிசம்பரில், 3.46 விழுக்காடாக இருந்தது. 2019 டிசம்பரில், மொத்த விலை பணவீக்கம், 2.59 விழுக்காடாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம், உணவுப் பொருள்களான வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை மிகவும் அதிகரித்ததாகும்.

உணவுப் பொருள்களின் பணவீக்கம், 2019 டிசம்பர் மாதத்தில், 13.12 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய மாதமான நவம்பரில், 11 விழுக்காடாக இருந்தது. உணவு அல்லாத பொருள்களின் பணவீக்க விகிதம், நான்கு மடங்கு அதிகரித்து, 7.72 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதுவே நவம்பரில், 1.93 விழுக்காடாக குறைந்திருந்தது.

டிசம்பர் மாதத்தில் உணவுப் பொருள்களில், காய்கறிகள் விலை, 69.69 விழுக்காடு அளவுக்கு, அதிகரித்துள்ளது. இதற்கு, வெங்காயத்தின் விலை ஏற்றம் முக்கிய காரணமாகும். வெங்காயத்தின் விலை, மதிப்பீட்டு மாதத்தில், 455.83 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து உருளைக்கிழங்கு, 44.97 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரிப்பைக் கண்டது.

இதற்கிடையே, சில்லறை விலை பணவீக்கமும், 2019 டிசம்பர் மாதத்தில், ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்கள் விலை அதிகரிப்பால், சில்லறை விலை பணவீக்க விகிதம், 7.35 விழுக்காடாக உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |