அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூற வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக தாக்கிப்பேசிய அவர், தேச துரோகிகளையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும் எனமுழக்கமிட்டார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மீது புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கர்நாடக பாஜக சுற்றுலா துறை அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூர் பேசியதற்கு ஆதரவாக ட்விட்டரில், பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் & யாகூப் மேமன் மரணத்தை எதிர்ப்பவர்கள், துக்டே துக்தே கும்பலை ஆதரிப்பவர்கள் மற்றும் #CAA க்கு எதிராக பொய்களைப் பரப்பும் தீவிரவாதிகள் குறித்து தான் அனுராக் தாக்கூர் பேசினார். தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, டெல்லி ஷாகின் பாக் பகுதியில் பெண்கள் பல வாரங்களாக கடும் குளிரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒருத்தர் கூட இறக்கவில்லை. இதற்காக ஏதேனும் விசேச பானங்களை உட்கொள்கிறார்களா? எனவும், ஆனால் மேற்குவங்கத்தில் பயத்தின் காரணமாக சிலர் தற்கொலை செய்து கொல்வதாகவும் சர்ச்சையாக பேசினார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷாஹீன் பாக் மக்கள் உங்கள் வீட்டு மகள்கள் மற்றும் சகோதரிகளை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்வார்கள். டெல்லி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 11-ஆம் தேதி இரவே ஷாஹீன் பாக் இடம் காலி செய்யப்படும் என பா.ஜ.க எம்.பி. பர்வேஷ் வர்மா சர்ச்சையாக பேசினார்.இப்படி பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து சர்ச்சையாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் இது குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் பயன்படுத்திய மொழி திகைக்க வைக்கிறது. டெல்லி தேர்தலில் உடனடி தோல்வியை எதிர்கொண்டுள்ள பாஜக தலைவர்கள் நாகரிக அரசியல் சொற்பொழிவுக்கு விடைபெற்றுள்ளதாக தெரிகிறது. பிரதமரும் பாஜக ஜனாதிபதியும் ஏன் இந்த தலைவர்களுக்கு அறிவுரை கூறவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
The language used by Minister Anurag Thakur, BJP MP Parvesh Verma, BJP State President Dilip Ghosh snd BJP Karnataka Minister CT Ravi is appalling.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 29, 2020
Why are the PM and the BJP President not admonishing these leaders?
— P. Chidambaram (@PChidambaram_IN) January 29, 2020