பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவு எடுத்ததாக பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் ஒரு நடிகை என்பதால் அரச குடும்பத்தில் மரியாதை கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதனால் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்களே கனடாவில் குடியேற முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டனில் நேற்று பேட்டியளித்த ஹாரி, ராணி எலிசபெத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தாயார் இளவரசி டயானாவை 23 ஆண்டுகளுக்கு முன்பு இழந்து விட்டதாக உருக்கமாக கூறிய ஹாரி தம்மை வளர்த்து ஆளாக்கியது ராணி எலிசபெத் எனக் குறிப்பிட்டார். ஆனால் இளவரசர் சார்லஸ் மற்றும் மூத்த சகோதரர் வில்லியம்ஸ் குறித்து ஹாரி ஏதும் குறிப்பிடவில்லை. அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகும் தனது முடிவுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இளவரசர் ஹாரி பிரிட்டிஷ் இராணுவத்தில் பணிபுரிந்தவர். ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படை வீரராக இருந்து போரில் பங்கேற்றவர்.