திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர்.
இதில் முருகேஷ் பாபு என்பவரின் மகன் கார்த்திக் 13 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றார். முருகேஷ் தனது மகன் கார்த்திக் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தேவையான பணத்தை கட்டியபின் அங்கிருந்து சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்க அலுவலர் ஒருவர், கார்த்திக்கை அங்கிருந்து வெளியேற்றினார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து சதுரங்கப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவனின் தந்தை முருகேஷ், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “எனது மகன் கார்த்திக் அங்கீகரிக்கப்படாத சதுரங்கப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறி திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கத்தின் அலுவலர் மாநில செஸ் போட்டியிலிருந்து அவரை பாதியிலேயே வெளியேற்றியுள்ளார்.
இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத சதுரங்கப் போட்டியில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கடிதமும் எழுதவைத்துள்ளார். இது வேதனையளிக்கிறது. எனவே எனது மகன் வெளியேற்றப்பட்டதற்கு உரிய விளக்கம் வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என பல முன்னணி சதுரங்க வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சதுரங்கப் போட்டிகளில் நடைபெறும் அரசியலால் பல சமயங்களில் சிறுவர்கள் இதுபோன்ற பாதிப்பை சந்திக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் இச்சம்பவம் குறித்து மாநில செஸ் கூட்டமைப்பும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் பதில் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்துவருகின்றன.