பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன
நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இந்தியாவை வன்முறைக் காடாக்கவேண்டும் என்பதில் முகமது அலிக்கும் ஈவெராவுக்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் பாலக்கரை செயலாளர் விஜயரகுவை கொலை செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட நபர் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர். இதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகுவின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். பட்டியிலினத்தைச் சேர்ந்த ரகு முஸ்லிம் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஏன் திருமாளவன் குரல் எழுப்பவில்லை.
டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் அரசியல்வாதிகள் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டும். தஞ்சை பெரிய கோயில் ஈவெரா காட்டியது கிடையாது; அது ராஜராஜ சோழன் கட்டியது. அங்கு ஆகம முறைப்படித்தான் குடமுழுக்கு நடைபெறும். ஆன்மிகவாதிகளை தவிர வேறு யாருக்கும் அது குறித்து பேசுவதற்குத் தகுதியில்லை. புதியதாகத் திறக்கப்படும் மசூதியில் அரபு மொழியில் ஓதக்கூடாது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கூறினார்.