மோடி திட்ட மோசடிக்கு இந்த அறிவிப்புதான் காரணம் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் விவசாயிகள் என்று தங்களை பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டுக்கு துணைபுரிந்த 34 அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 81 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இது குறித்து தமிழக முதல்வர் கூறுகையில், இந்த முறைகேட்டுக்கு முக்கிய காரணமே மத்திய அரசு அறிவித்த அறிவிப்பு தான் என்று தெரிவித்தார். ஆதார் மற்றும் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் தாமாக பதிவு செய்யலாம் என அறிவித்ததால் போலி நபர்கள் விவசாயிகளாக தங்களை பதிவு செய்து கிஷான் திட்டத்தில் பலன் அடைந்து உள்ளார்கள் என்று தெரிவித்தார். மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.