கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ. 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடியை மட்டும் ஒதுக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? என்று ரூ.510 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.510 கோடி நிவாரண நிதி போதுமானதாக இருக்காது என நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு குறிப்பிட்டுள்ளது.