குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், “மாணவர்கள் நடத்திவரும் நீண்ட கால போராட்டத்திற்கு என்னுடன் சேர்த்து பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் முதல்முறையாக இங்கு வந்துள்ளேன். 3 மாதத்திற்கு முன்பு போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தேன்.
ஆனால், போராட்டம் உயிர்ப்புடன் தொடர்வது இன்று இங்கு வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது. அரசியலமைப்பு, நாடு அனைத்தையும் மீட்க வேண்டும். இது நீண்ட போராட்டம். பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். இங்கு போராடும் மக்கள் சோர்வடைந்து வீட்டிற்கு செல்வார்கள் என அரசு நினைக்கிறது. பொறுமையாக இருந்து போராட்டத்தைத் தொடர வேண்டும்.
நான் ட்விட்டரிலிருந்து வெளியேறினேன். ஆனால், ஜாமியா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது என் முடிவை மாற்றிக் கொண்டேன். ஒரு பெண் போராடுவது எனக்கு மனவலிமை தந்தது. எனவே, மீண்டும் ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினேன். இனி அமைதியாக இருக்க மாட்டேன்” என்றார்.