தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போல் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீபாவளிக்காக இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதே போல் இரண்டு வாரங்களுக்கு முன்பே சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரயில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் அதில் முன் பதிவு செய்யாதவர்கள் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், தற்போது வரை சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சிறப்பு ரயில் அறிவிப்பு தாமதத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது ஏற்கனவே சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை போட்டு விட்டதாகவும், அதில் சில குறைபாடுகள் இருப்பதால் அட்டவணையை மாற்றி அமைக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் இரண்டு சுவிதா ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இன்று மாலை அல்லது நாளைக்குள் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.