இந்தியாவுக்கு திடீர் பயணம் மேற்கொள்வது ஏன்? என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அதிபா் டிரம்ப்பின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவருடைய மனைவி மெலானியா டிரம்ப்பும் உடன் வருகிறார்.
இந்தப் பயணம் தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது :-
பிரதமர் மோடி எனது நண்பர், நல்ல மனிதர். இந்த மாத இறுதியில் எனது இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையிலான சில வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அவை சரியாக அமைந்தால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்து நிறைவேறும். குறிப்பாக ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார். அவர்கள் அனைவரையும் சந்திக்க நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் பயணம் தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து கூறியதாவது,
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலுள்ள நெருங்கிய நட்பின் வெளிப்பாடாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்தகட்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும் விதமாகவும் இந்த சந்திப்பு இடம்பெறும் என்றார்.
தில்லி, ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனா். குறிப்பாக ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் மிகப்பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஆமதாபாத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள மொடேரா மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க முடியும். இதன்மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சாதனையை தகர்க்கவுள்ளது.