தி.மு.க நிர்வாகியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் தி.மு.க கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று நதியா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தான் கட்சிப் பொறுப்பில் இருப்பதால் ஊரடங்கு சமயத்தில் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட கூடாது என தமிழன் பிரசன்னா தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நதியா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழன் பிரசன்னா உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நதியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.