பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இறந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-புனி தம்பதியினர். புனி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் ராஜேஷ் அவரை சந்திப்பதற்காக ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி சென்றுள்ளார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனி தனது கணவனை மார்பில் உதைத்துத் தள்ள, கீழே விழுந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தனது சகோதரன் ராஜேஷுக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து சொல்ல ராஜேஷின் சகோதரி தொலைபேசியில் அழைத்தபோது ராஜேஷ் குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாக புனி கூறியுள்ளார்.
அதன்பிறகு ராஜேஷின் உடலை பார்த்த அவரது தாய்க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் ராஜேஷின் தாய் தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் எப்போதாவதுதான் ராஜேஷ் குடிப்பார் என்றும் தனது மருமகளுக்கு தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளது என்றும் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் ராஜேஷ் இயற்கையான முறையில் மரணம் அடையவில்லை என்றும் அவர் அவரது விலா எலும்பு உடைந்து இருந்ததும் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ராஜேஷின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரிடையே ஏற்பட்ட சண்டையில், தான் அடித்து விட்டதாகவும் அதில் ராஜேஷ் இறந்ததாகவும் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் புனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.