குடிபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த நாகலூரில் வசித்து வரும் பிரான்சிஸ்-மதனமேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், பிரான்சிஸ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இதனால் மதனமேரியிடம் அவ்வப்போது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்த இவர் மூன்று தினங்களுக்கு முன்பு நன்றாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு பின்னர் அருகில் இருந்த தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பிரான்சிஸ் மனைவியிடம் தகராறு செய்ததால் கோபம் கொண்ட மனைவி அருகில் கிடந்த கல்லால் பிரான்சிஸ் தலையில் கடுமையாக தாக்க படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மதனமேரி அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்ல, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரான்சிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தலைமறைவான மதனமேரியை தேடி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.