கணவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாண்டி என்ற சலவைத் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கணவர் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குடிபோதையில் பாண்டி படுத்து தூங்கிய சிறிது நேரத்திலேயே அவரது வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது எரிந்த நிலையில் பாண்டி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக பார்வதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் தான் தூங்கிக் கொண்டிருக்கும்போது பார்வதி தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாண்டி தப்பித்து விடாமல் இருப்பதற்காக பார்வதி அந்த வீட்டின் கதவை வெளியில் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இவ்வாறு மரண வாக்குமூலம் அளித்த பிறகு பாண்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் காவல்துறையினர் பார்வதி குடும்ப பிரச்சனை காரணமாக தன் கணவரை உயிரோடு எரித்துக் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.