புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் மனைவி கணவரின் வழியைப் பின்பற்றியே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.
28 வயதாகும் காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா கவுல்வுக்கும் டேராடூனை சேர்ந்த இராணுவ வீரர் சங்கர் தோடண்டியாவிற்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே கடந்திருந்த நிலையை சங்கர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 துணை இராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே 20 மணி நேரம் நீடித்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இதில் சங்கரும் ஒருவர் ஆவார்.
கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த நிகிதா, சங்கர் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ என கூறியது அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவைத்தது. மேலும் கணவரின் முகத்தை பார்த்து நீங்கள் என்னை நேசிப்பதாக கூறினீர்கள், ஆனால் தாய் நாட்டை தான் அதிகமாக நேசித்து இருக்கிறீர்கள் என்று கூறி அழுதார்.
மேலும் உங்கள் வழியை பின்பற்றி எனது இறுதி மூச்சி உள்ளவரை நாட்டுக்காக போராடுவேன் என சபதம் ஏற்று ராணுவத்தில் சேருவதற்காக முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து இதற்கான குறுகியகால திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இராணுவம் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டதால் தான் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் ட்ரைனிங் அகடாமியில் 1 ஆண்டு பயிற்சி பெற இருக்கிறார்.