கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கணவனை மனைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவி வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா தாக்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக வீட்டுக்குள் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளார். இதனால் அந்த நபரோ வீட்டுக்கு செல்ல முடியாததால், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருக்கின்றார்.
இந்த விவகாரம் தற்போது கேரளாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது. இதுதொடர்பாக கணவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.