கள்ளகாதலால் கணவனை கொன்ற மனைவிக்கும், கள்ள காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னையில் உள்ள நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டி கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் என்பவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஜெயபாரதிக்கும் பாடிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக கணவர் கார்த்திக் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மெரினா கடற்கரைக்கு ஜெய பாரதி அழைத்து வந்தார். அங்கே கள்ளக்காதலன் ஹரி கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக ஜெயபாரதி உட்பட 4 பேரை மெரினா போலீசார் கைது செய்தனர் இதில் 2 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு சிறார் நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயபாரதி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த சென்னை 6- வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.