காட்டுப்பன்றிகள் மக்காச் சோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை முடிந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர், குறைந்த செலவு போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அதிகளவு நாசம் செய்கின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, உணவு தேவைக்காக காட்டு பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாகவும், வனப்பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருகள்பட்டி, புக்குலம், அடிவெள்ளி போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டமானது அதிகளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் பயிர்களை சுற்றி துணிகள் வைத்துள்ளதாகவும், அதனையும் மீறி காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதம் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே காட்டு பன்றிகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்வதை தடுக்கும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.