வாலிபர்கள் இணைந்து காட்டு யானையை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அச்சத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் ஒன்று சேர்ந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாலையோர தேயிலை தோட்டம் வழியாக காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தவுடன் தகவல் தெரிவித்தால் வனத்துறையினர் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.