தொழிலாளியின் வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கத்தரிதோடு கிராமத்திற்குள் புகுந்த 6 காட்டு யானைகள் பொது மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் கூலித் தொழிலாளியான முருகதாஸ் என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்த முருகதாஸ் குடும்பத்தினர் பயத்தில் அலறி சத்தம் போட்டுள்ளனர்.
அதன் பிறகு காட்டு யானைகள் அதிகாலை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த நாடுகாணி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, சேதமடைந்த வீட்டிற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் காட்டு யானையை விரட்டியடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.