பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு காட்டுயானைகள் உள்ளே புகுந்து விட்டன. இதனை அடுத்து காட்டு யானைகள் சத்துணவு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து பருப்பு மற்றும் அரிசியை தின்று அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
அதன் பின் வனத்துறையினர் கூறும் போது, எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் வேலைக்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதியில் அதிகமாக காணப்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் யாரும் தனியாக வெளியே செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.