காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து காட்டு யானைகள் தமிழ் மோகன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தி அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை தின்று நாசப்படுத்தியுள்ளது. அந்த சமயம் வீட்டில் இருந்தவர்கள் பின்வாசல் வழியாக தப்பித்து விட்டனர். அதன் பின் காட்டு யானைகள் மேலும் இரண்டு தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து நாசப்படுத்திவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.