காட்டு யானை பள்ளிவாசல் சுற்று சுவரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று நள்ளிரவு நேரத்தில் தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்குள்ள மரத்தில் விளைந்த மாங்காய்களை பறித்து தின்று அட்டகாசம் செய்துள்ளது.
இதனை அடுத்து நீண்ட நேரம் அங்கு சுற்றித் திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வெளியே செல்வதற்கு பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து யானை இடித்து தள்ளிய பள்ளிவாசல் சுற்றுச் சுவருக்கு உரிய இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.