காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் நாடுகாணி என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து தங்கராஜ் என்பவரது வீட்டின் சுவரை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது.
இந்த சத்தம் கேட்டு எழுந்த தங்கராஜின் குடும்பத்தினர் பின்பக்க வாசல் வழியாக தப்பித்து ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு காட்டுயானைகள் அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் சேதப்படுத்திய தங்கராஜ் குடும்பத்தினரின் வீட்டை சீரமைக்க வனத்துறையினர் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.