வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள் சிறுமிகளின் போர்வையை பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் யானை தனது 2 குட்டிகளுடன் சங்கிலிரோடு, நல்லமுடி, பன்னிமேடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் நடமாடியுள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்குள் புகுந்துவிட்டது. அந்த சமயம் வனத்துறையினர் கல்லார் எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஈட்டியார் தோட்ட பணியாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதோடு அரிசியை எடுத்து தின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காட்டுயானைகள் அங்குள்ள மணியம்மா என்பவரது வீட்டு கதவை உடைத்து விட்டது. அதன் பிறகு காட்டு யானை ஒன்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சிறுமிகளின் போர்வையை பிடித்து இழுத்ததால் அச்சத்தில் அவர்கள் கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீப்பந்தம் காட்டியும், கூச்சலிட்டும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.