காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் இருதயராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் காலை 7 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மசினகுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போதிய வெளிச்சமில்லாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து இருதயராஜ் ஊட்டி -மசினகுடி சாலையில் சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவரை துரத்தி சென்று துதிக்கையால் தாக்கியுள்ளது.
அதன் பின் படுகாயமடைந்த இருதயராஜின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருதயராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இருதய ராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.