காட்டு யானைகள் மருத்துவமனைக்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் சேக்கல்முடி எஸ்டேட்டில் இருக்கும் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து விட்டது. அதன் பிறகு காட்டு யானைகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பிரிவிலுள்ள கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து நாசப்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காட்டு யானைகள் டாக்டர் வீட்டு கதவு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் போன்றவற்றை உடைத்து நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.