காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பிடித்து கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் அதனை மர கூண்டுக்குள் அடைத்து விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் காயமடைந்த யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் உதயன், விஜய், சுமங்களா உட்பட 5 கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர். அதன்பின் இந்த கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பிடித்து மருத்துவ குழுவினர் உதவியோடு அதற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் காயமடைந்த யானையை முதுமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி கும்கி யானைகளின் உதவியோடு காட்டு யானையை லாரியில் ஏற்ற முயற்சி செய்த போது அந்த யானை லாரியில் ஏற மறுத்துள்ளது. இதனால் அந்த காட்டு யானையை கும்கி யானைகள் முட்டி தள்ளி லாரிக்குள் ஏற்றி உள்ளது. இதனை தொடர்ந்து அபயரண்யம் முகாமிற்கு காட்டு யானையை கொண்டு சென்ற பிறகு வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியோடு அதனை மரகூண்டுக்குள் அடைத்து விட்டனர்.