காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், கரடி, புலி, காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் அனைத்து இடங்களும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்குள்ள சாலை ஓரங்களில் காட்டு யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் அதிகளவில் நடமாடுகிறது.
அந்த சாலை வழியாக சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதால் சாலையோரம் குட்டிகளுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதால் வனவிலங்குகள் சாதாரணமாக உலா வந்துள்ளது.
ஆனால் தற்போது சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால் ஏராளமான வாகனங்கள் அவ்வழியாக வந்து செல்லும். இந்நிலையில் சாலையில் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்தோடு வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.