காட்டு யானை ஒன்று தொழிலாளியை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு காலை 6 மணி அளவில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. இந்த யானையை பார்த்ததும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை வருவதை பார்க்காமல் நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டு உஷார்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து பதற்றத்துடன் ஓடிய தொழிலாளியை காட்டு யானை துரத்தியது. அதன்பின் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மறுபுறம் தொழிலாளி பதுங்கியதால் காட்டு யானையிடம் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கிடையில் தொழிலாளியை காட்டு யானை விரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.