நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரத்தில் இரையை தேடி சென்ற காட்டுயானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு கிராமத்தில் விவசாயிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை தங்களுடைய நிலத்தில் பயிர் செய்துள்ளனர். அனவன்குடியிருப்பு கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்தில் உள்ளது. எனவே வனவிலங்குகள் அடிக்கடி இரையை தேடி இக்கிராமத்திற்கு வந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
இதனால் செல்லகுட்டி என்ற விவசாயி தனது நிலத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க மின்வேலி ஒன்றை அமைத்துள்ளார். இந்நிலையில் இரையைத் தேடி காட்டு யானை கூட்டம் ஒன்று அப்பகுதியில் உள்ள விளைநிலத்தில் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பெண் யானை ஒன்று செல்லகுட்டியின் நிலத்தில் புகுந்ததால் அங்குள்ள மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. காலையில் அப்பகுதியாக சென்ற விவசாயிகள் சிலர் இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் பாபநாசம் வனத்துறையினர், விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதனைத்தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்கள் இறந்த யானையின் வயது 40 என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாபநாசம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாயி செல்லக்குட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.