தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என ஆட்சியர்களிடம் கருத்து கேட்க உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு குழுவு, கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு நிபுணர் குழுவினருடனும் ஆலோசனை நடத்தவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி நாளை மறுநாள் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணொலி காட்சி மூலம் 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 6,535 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர்.