இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதற்குத் தயாராகும் வகையிலேயே தற்போது இந்திய அணி தங்களைப் பலப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் என்ட்ரி தந்துள்ளனர்.
உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இன்னும் ஒரு பந்துவீச்சாளர் இடம் காலியாக உள்ளது என இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். அதேசமயம், வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி மிரட்டல் ஃபார்மில் இருக்கும் தீபக் சாஹர், இந்தத் தொடர் மூலம், பந்துவீச்சில் காலியாக இருக்கும் அந்த ஒரு இடத்தைக் கைப்பற்றுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சமீபகாலமாக சொதப்பிவருவதால், இந்தத் தொடரில் அவர் தனதுத் திறமையை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளார். ரிஷப் பந்த் போட்டியின்போது சில தவறுகளை மேற்கொண்டால் ரசிகர்கள் யாரும் தோனி தோனி என சத்தம்போட்டு அவருக்கு மேலும் அழுத்ததைத் தரவேண்டாம் என கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேசமயம், காயம் காரணமாக ஷிகர் தவான் இந்தத் தொடரிலிருந்து விலகியதால், அவருக்கு மாற்று வீரராக மற்றொரு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்த அவருக்கு, இம்முறை வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது கோலி ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போதுவரை இந்திய அணி விளையாடிய ஏழு டி20 தொடர்களில் ஐந்துமுறை மட்டுமே வென்றுள்ளது. இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு டி20 தொடரையும் வென்ற இந்திய அணி, இம்முறையும் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறுமுனையில், ஆப்கானிஸ்தானிடம் டி20 தொடரை இழந்து ஆவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தத்தொடரில் ஃபார்மிக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்விரு அணிகள் இதுவரை 14 போட்டிகளில் நேருக்குநேர் மோதியதில், இந்திய அணி எட்டு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து முறையும் வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.
இந்திய அணி: கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: பொல்லார்டு, லென்டல் சிம்மன்ஸ், ஃபேபியன் ஆலன், ஷெல்டான் காட்ரெல், ஷிம்ரான் ஹெட்மயர், கீமோ பால், எவின் லீவிஸ், ஜேசன் ஹோல்டர், பிரான்டான் கிங், நிக்கோலஸ் பூரான், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கேரிபியரி, ரூதர்ஃபோர்டு, தினேஷ் ராம்டின், ஹைடன் வால்ஷ்.