இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற நிலை குழு ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் ஏசி பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு மத்திய அரசாங்கம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று சொல்லியுள்ளது.
இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டில் பயணிகள் ரயில் டிக்கெட்டுக்கு 59,837 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் சராசரியாக 57 சதவீதம் வரை சலுகைகள் கிடைப்பதோடு, மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயாளிகள் போன்றவர்களுக்கும் தனி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60-ல் இருந்து 70 ஆக உயர்த்தப்படவில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் விமான பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.