திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள் இரவு நேரங்களிலும் செயல்படுவதால் ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
21 வயது:
பல இடங்களில் மது கடைகளை மூட வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அதன் விற்பனை குறைந்தபாடில்லை. ஆகவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழானவர்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல மதுக்கடைகளை பொருத்தவரை விலை பட்டியல் வைக்க வேண்டும். ரசீது வழங்க வேண்டும்.
புகைப்படம்:
தமிழகத்தில் டாஸ்மார்க்கின் விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மாற்றி அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயணர் பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மாணவர்கள் சீருடை உடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் வழங்கப்பட்டன.
மதுக்கடைக்கு தடை:
அதை பார்த்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்கை தொடர்ந்த மனுதாரர்களை இந்த நீதிமன்ற பாராட்டுகிறது. சீருடை உடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. நாடு எங்கு செல்கின்றது என தெரியவில்லை ? இதற்கு உடனடியாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லை எனில் மதுவிற்பனைக்கு தடை விதிக்க வேண்டிய நேரிடும் என குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விவரங்களை திரட்ட உத்தரவிட்டு வழக்கு விசாரணையே இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.