ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சகத்தை செயலாளர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை நீடிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருக்க கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இதை உத்தரவு வரும் ஏப்ரல்14ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 325 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், உத்தரபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா தொற்றை தடுக்க மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், ஊரடங்கை 28 நாளாக நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையியல், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.