Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்!

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில், பல மாநில முதலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆலோசனையை அடுத்து, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை காலை 10 மணிக்கு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். ஊரடங்கு எவ்வித மாற்றங்களுடன் பிறப்பிக்கப்படும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |