எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை 28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி இலக்காக வைத்திருந்ததால்,
வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, இந்த காரின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில், எம்ஜி நிறுவனம் குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், எம்ஜி நிறுவனம் இரண்டாவது ஷிஃப்டிலும் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கான திட்டம் குறித்து எம்ஜி நிறுவன அதிகாரி முக்கியத் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, எம்ஜி இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் “ஹெக்டர் டெலிவிரி குறித்த முறையான செயல்திட்டத்தை வகுக்கும் வரை புக்கிங்கை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை என்றும் முதலில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் கூறினார்.