தமிழகத்தில் மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த நிலையில், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மனித சங்கிலி பேரணியை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை 2 பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை.
இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவம்பர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும், அனுமதி மறுக்கும் பட்சத்தில் தமிழக காவல்துறை நீதிமன்ற அவமதிப்பை வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் கூறினர். இதனால் தமிழக டிஜிபி தற்போது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
இது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நீதிமன்ற உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனித நல்லிணக்க ஊர்வலம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்று முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.