நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று அசத்தியது.
போட்டி முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ஆட்டம் எங்கள் கையைவிட்டுப் போனது என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.
இருப்பினும் இந்த வெற்றிக்கு உண்மையான சொந்தக்காரர் வில்லியம்சன்தான். ஏனெனில் அவர் யாரும் எதிர்பாராத ஒரு ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். அவர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. ஏனெனில் அதனை நானும் அனுபவித்திருக்கிறேன்.
அதேபோல் ஷமி வீசிய கடைசிப்பந்தின்போது நாங்கள் விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். ஏனெனில் வெற்றிபெற ஒரு ரன்னே தேவை என்று இருந்ததால், ஷமியை யார்க்கர் பந்து வீசும்படி வேண்டுகோள்விடுத்தேன். அவரும் அதனைச் சிறப்பாகச் செய்து ஆட்டத்தையே திசை மாற்றினார்.
அதேபோல் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற 18 ரன்கள் இலக்காக இருந்த நிலையில், ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ் அடித்ததுமே, பந்துவீச்சாளர் அழுதத்திற்குள்ளாவார் என எதிர்பார்த்தேன். நான் நினைத்ததைப் போலவே சவுதி அழுத்தத்தில் கடைசிப் பந்தை வீசியதால் இந்திய அணி இந்த வெற்றியைப் பெற்றது” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை 5-0 என்ற கணக்கில் முடிக்க இந்திய அணி முயற்சிசெய்யும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது.