முதல் சுற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார் .
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது . இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.இதில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டத்தையும் , 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், பெலாரஸ் வீராங்கனை அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது டென்னிஸ் ஆடுகளத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் வலியால் துடித்தார். அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் விளையாட முயற்சித்தார். ஆனால் போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் 3-3 என்ற கணக்கில் இருந்த செரீனா வலி அதிகமானதால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நடப்பு தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார். இதன் மூலம் அவர் 8 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் .