உலகின் 2 ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலகின் 2 ம் நிலை வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த நவமி ஒசாகா 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அப்போது செய்தியாளர் சந்திப்பை மறுத்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும் இதில் இருந்து மீள்வதற்கு ஓய்வு தேவை என்று அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் லண்டனில் வருகின்ற 28 ம் தேதி நடைபெற உள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நவமி ஒசாகா பங்கேற்பதில்லை என்று அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டூவர்ட் டுகிட் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது .” இந்த ஆண்டு நடைபெற உள்ள விம்பிள்டன் டென்னிசில் போட்டியில் ஒசாகா பங்கேற்க மாட்டார். தற்போது அவர் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி விடுவார் என்றும் , உள்நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட ஆர்வமுடன் இருக்கிறார்”, என்று அவர் கூறினார்