நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி மாலை, இது புயலாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து 8, 9ஆம் தேதிகளில் வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற் பகுதிகளை ஒட்டிய நிலவக்கூடும். அதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மிதமான மழையும், 8, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக:
அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.