குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது.
நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் நீங்கள் உணவில் குளிர்ச்சி நீங்கும் பொருளை சேர்ப்பதன் மூலம் உடலில் சளி தொல்லை எட்டிப்பார்க்காது.
குளிர்கால நோய்கள்:
தற்போது மழைக்காலம் என்பதால், குளிரை தாங்கி பிடிக்கவும், நம் உடலில் எந்த நோயும் வராமல் இருப்பதற்கும் உணவில் சில பொருட்களை சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். குளிர்காலங்களில் குளிர்ச்சியான உடலை கொண்டிருப்பவர்களை எளிதாக கபநோய் தாக்கிவிடும். அதனால் இவர்களுக்கு சளி இருமல் தொண்டை வறட்சி ஆகியவை விட்டுவிட்டு வரும். அந்த சமயத்தில் மருந்துகளை தேடி ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவர்கள் இயற்கையாகவே வைட்டமின் சி உள்ளடக்கத்தைக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.
சிட்ரஸ்:
சளி தொல்லைகள் வந்த பிறகு முழுமையாக குணப்படுத்த உதவும் என்று சொல்ல முடியாது. சிட்ரஸ் பழங்கள் சளி உண்டாகும் போது உபாதையை குறைக்க வழி செய்கிறது. காய்கறிகளிலும் இதே போன்று நிறைய சத்துகள் நிறைந்து இருக்கிறது. முன்கூட்டியே இதை எடுத்துக் கொள்வதால் சளி போன்ற உபாதைகள் வராமல் தடுக்கமுடியும். இதனை உணவில் எவ்வாறு சேர்க்கலாம் என்பதை பார்க்கலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை:
சுவை நிறைந்த உணவுகளோடு மருந்தாக நினைக்கும் உணவையும் சேர்த்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரஞ்சு சாறு விட்டமின் சி நிறைந்தது. புளிப்பு சுவை கொண்டது. வெறும் சாற்றை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது ஆரஞ்சு சிட்ரஸ் காரணங்களால் புளிப்பு நிறைந்தால் இதை எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
அவர்களுக்கு தரும்போது பால் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் உடன் ஆரஞ்சு சாற்றை கலந்து சுவை மிகுந்ததாக கொடுக்க வேண்டும். அதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது நெல்லிக்காய் சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து கொள்ளுதல் பயனளிக்கும்.
சாலட்:
கோடைகாலத்தில் மட்டும்தான் சாலட் சாப்பிட வேண்டும் என்றில்லை. குளிர்காலத்தில் சாலட் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். பிடித்தமான காய்கறிகளை சுத்தமாக அலசி, சிறு துண்டுகளாக நறுக்கி வண்ண வண்ண கலர்களில் இருக்கும் அவற்றை அரை வேக்காடாக வேக வைத்து அதை அதில் எலுமிச்சை சாறை பிழிந்து சிறிது உப்பு, கொத்தமல்லி, மிளகு தூள், போன்றவற்றை சேர்த்து சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிடும்போது சுவையும் வித்தியாசமாக இருக்கும். அனைத்து காய்கறிகளை உட்கொள்வதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வைட்டமின் அடங்கிய நீர்:
குடிக்கும் நீரை கொதிக்க வைத்து குடியுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். நீங்கள் அதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாற்றை சேர்த்து குடிக்கலாம். நீரைக் கொதிக்கவைத்து புதினா சேர்த்து குடிக்கலாம், ஒருநாள் சீரகத் தண்ணீர், அண்ணாச்சி பூ போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் ஊட்டச்சத்து நிறைவாக இருக்கும். நாம் குடிக்கும் நீரிலும் இதனை கலந்து குடிக்கலாம். இது குளிர்காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலத்துக்கும் பொருந்தும்.
தினமும் ஒரு சூப்:
உணவோடு தினமும் ஒரு சூப் என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உடனடியாக தயாரிக்கும் சூப்களை தவிர்க்கவேண்டும். வாழை தண்டு, காளான், கொள்ளு, காய்கறி என தினமும் ஒரு வகை சூப் தயாரிக்க வேண்டும். அசைவ பிரியர்கள் ஆட்டுக்கால் மட்டன் சூப் போன்றவற்றை சாப்பிடலாம். சூப் செய்ய பயன்படும் பொருட்கள் வீட்டிலேயே தயாரிக்க வேண்டும்.
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, மிளகு உப்பு போன்றவை அதில் சேர்ப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். உணவில் காரத்துக்கு மிளகு பயன்படுத்துங்கள். மிதமான சூட்டில் இருக்கட்டும். புதிதாக செய்து சாப்பிடுங்கள். பழைய உணவை சாப்பிட்டால் சளித் தொல்லை அதிகரிக்கும்.