தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் 7-ஆவது கோவிலான தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பெருமாள் நிகரில் முகில் வண்ணன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் தேர் திருவிழாவை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி இருந்ததால் வள்ளியூர் பொதுமக்கள் மற்றும் தென்திருப்பேரை பொதுமக்கள் இணைந்து திருவிழாவை நடத்த அனுமதி வேண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசனை சந்தித்துள்ளனர்.
அப்போது அவர் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தேரோட்டம் நடைபெறுவதற்கு பதிலாக தேர் நிலையில் இருந்து புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிலையை வந்தடைய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதால் தேர் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதிகளில் உலா வந்த தேர் 10:30 மணிக்கு நிலையை வந்தடைந்துள்ளது.