தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலையில் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகப் பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அதேபோல டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், அதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை, மிதமான மழையும் இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.