ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் பிரியங்கா காந்தியை எச்சரித்துள்ளது
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்தது நிலையில், பாதுகாப்பு சட்டத்தில் கடந்த வருடம் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. பாதுகாப்பு நிறைந்த கருப்பு பூனை படை பிரதமருக்கும் அவருடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற திருத்தமும் முன்னாள் பிரதமராக இருந்தார் பதவியிலிருந்து விலகி ஐந்து வருடங்கள் இந்தப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்தி மரணமடைந்து 30 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சென்ற வருடம் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில் டெல்லி லோதி எஸ்டேட்டில் இருக்கும் அரசு பங்களாவில் பல வருடங்களாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் அரசு பங்களாவை காலி செய்ய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் பிரியங்கா காந்திக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. கருப்பு பூனை பாதுகாப்பு மற்றும் அரசு பதவி இல்லாதவர்களுக்கு அரசு பங்களாவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கூறி இந்த உத்தரவை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேதியோ அல்லது அதற்கு முன்னரோ அரசு பங்களாவை காலி செய்தாக வேண்டும் என அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் பங்களாவை காலி செய்யவில்லை என்றால் விதிகளின் அடிப்படையில் அபராத வாடகை வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.